புதுச்சேரி மாநிலம், ஊசுடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, அகரம் கிராமம் அரசு தொடக்கப்பள்ளியில் கடந்த மாதம் மழலையர் வகுப்பு ஆசிரியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அதற்குப் பதிலாக வேறு ஆசிரியரை நியமிக்காமல் கல்வித்துறை காலம் கடத்தி வந்த நிலையில், மாணவர்கள் சார்பாக பெற்றோர்கள் கல்வித்துறை இயக்குனரை சந்தித்து உடனடியாக ஆசிரியரை நியமிக்க வேண்டும் என மனு அளித்தனர்.
ஆனால் இதுவரை ஆசிரியர் நியமிக்கப்படாததால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டது.இந்த நிலையில் மழலையர் வகுப்பு ஆசிரியரை நியமிக்க வலியுறுத்தி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இணைந்து வகுப்பை புறக்கணித்து இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனையடுத்து பள்ளித் துணை ஆய்வாளர் வட்டம் 5 சொக்கலிங்கம் பெற்றோர்களுடன் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதி அளித்ததன் பேரில் தற்சமயம் போராட்டம் கைவிடப்பட்டது. இப்போராட்டம் காரணமாக பள்ளியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.