கோயம்புத்தூர் மாவட்டத்தின் சில தனியார் பள்ளிகள், மாணவ, மாணவியர்களின் விபரக் குறிப்பேட்டில் சாதி மற்றும் மத விவரங்களை நிரப்ப அழுத்தம் கொடுத்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை எதிர்த்து, முற்போக்கு இயக்கத்தினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
கோவை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) ஆகியோரிடமும், தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையத்திலும் இதுகுறித்து முறையிடப்பட்டது. சமூக சமத்துவம் மற்றும் மாணவர்களின் முழுமையான வளர்ச்சிக்கு இடையூறாக இருப்பதால், மாணவர்களின் வீட்டுப்பாட குறிப்பேடு அல்லது சுய விவரப்படிவங்களில் சாதி, மதம் சார்ந்த அடையாளங்களை குறிப்பிடக் கூடாது என்று அனைத்து பள்ளி முதல்வர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆனால், கோவையில் உள்ள பீளமேடு பி.எஸ்.ஜி மெட்ரிகுலேசன் பள்ளி, சித்தா புதூர் பி.ஆர்.சித்தாநாயுடு மெமோரியல் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, மற்றும் பல தனியார் பள்ளிகள் இந்த விதிமுறைகளை மீறி, சாதி/மத விவரங்களை மாணவர்களிடமிருந்து கேட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. மனு அளிப்பதில் தந்தை பெரியார் திராவிட கழக பொதுச்செயலாளர் கு. ராமகிருஷ்ணன், தமிழ்நாடு திராவிடர் சுயமரியாதைக் கழக தலைவர் மா. நேருதாஸ், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.