புதுச்சேரி: தட்டாஞ்சாவடி தொகுதிக்குட்பட்ட புதுப்பேட்டை பகுதியில் உள்ள ஸ்ரீ முத்தலாய் மாரியம்மன் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா மற்றும் உற்சவர் வீதி உலா தொடர்பாக ஏற்பட்ட மோதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவில் நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, இன்று நடத்தவிருந்த அனுமன் ஜெயந்தி வீதி உலாவிற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக கோவில் அதிகாரி அறிவித்தார். இது பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் கடும் எதிர்ப்புக்கு உள்ளானது.
அனுமதி மறுப்பு குறித்து கோவில் அதிகாரி பெயர் பலகையில் அறிவிப்பு எழுதி வைத்ததுடன், காவல்துறையிடம் பாதுகாப்பு கோரினார். இதற்கிடையே, லாஸ்பேட்டை காவல் நிலைய போலீசார் கோவிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
அனுமன் ஜெயந்தி சிறப்பு பூஜை முடிந்த பிறகு, கோவில் அதிகாரியை முற்றுகையிட்ட பொதுமக்கள் மற்றும் பக்தர்கள், கண்டன கோஷங்களை எழுப்பினர். அவர்கள் பெயர் பலகையில் உள்ள அறிவிப்பை அழித்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த லாஸ்பேட்டை இன்ஸ்பெக்டர் இனியன் தலைமையிலான போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், பொதுமக்கள் எழுத்துப்பூர்வமாக காரணம் தெரிவிக்கப்படும் வரை போராட்டத்தை கைவிடமாட்டோம் என உறுதியாக தெரிவித்தனர்.