வங்கதேசத்தில் ஒளிப்பரப்பாகும் இந்திய தொலைக்காட்சி சேனல்களை தடை செய்ய வேண்டுமென அந்நாட்டு உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் இக்லாஸ் உத்தின் புயான் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
மனுவில், இந்திய தொலைக்காட்சி சேனல்களால் வங்கதேசத்தின் சமுதாயத்திலும் கலாச்சாரத்திலும் தீய விளைவுகள் ஏற்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், அந்நாட்டில் இந்திய சேனல்களை ஒளிப்பரப்பத் தடை விதிக்கச் சட்டம் இயற்ற வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.
இந்திய தொலைக்காட்சி சேனல்களில் ஒளிப்பரப்பாகும் நிகழ்ச்சிகள் வங்கதேச கலாச்சாரத்திற்கு முரணாக இருப்பதாகவும், இளம் தலைமுறையினரை தீய பாதிப்புக்குள்ளாக்குகின்றன என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், சில நிகழ்ச்சிகள் மற்றும் செய்திகள் வன்முறையை தூண்டும் விதமாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இந்த மனு வங்கதேச உயர் நீதிமன்ற நீதிபதி பாத்திமா நஜீப் மற்றும் நீதிபதி சிக்தர் மஹ்முதுர் ராஜி ஆகியோரின் முன்நிலையிலான விசாரணைக்கு வரவுள்ளது.
வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள் நடைபெறுவதாகக் கூறி, அவர்களை பாதுகாக்க இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இதன் தொடர்ச்சியாகவே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் தீர்ப்புக்காக அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.