சென்னை பல்லாவரம் பகுதியில் நடைபெற்ற மனித நேய மக்கள் கட்சி நிகழ்ச்சியில் பாஜக மாநில ஒருங்கிணைப்பாளர் எச். ராஜாவுக்கு கொலை மிரட்டல் விடுத்த அக்கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் தாம்பரம் யாக்கூப் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோவையில் மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்த பாஜக மாநில பொதுச் செயலாளர் ஏ பி முருகானந்தம், தமிழ்நாடு கொலைகார மாநிலமாக உருவெடுத்து வருவதாக விமர்சித்துள்ளார்….
சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் பகுதியில் கடந்த 15 ஆம் தேதி மனித நேய மக்கள் கட்சி சார்பில் நடைபெற்ற ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் தாம்பரம் யாகூப் என்பவர் பாஜக மூத்த அதலைவரும் தமிழக பாஜக ஒருன்ஹ்கிணைப்பாளருமான எச். ராஜாவுக்கு 2 மணி நேரம் பாதுகாப்பை விளக்கிக் கொண்டால் அவர் எந்த மீடியாவுக்கும் பேட்டி கொடுக்க மாட்டார் என்றும் அவர் எங்கு பேட்டி கொடுத்தாரோ அதுதான் இறுதியாக இருக்கும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுப்பதாகவும் கூறியிருந்தார்.
மேலும் காவல்துறை பாதுகாப்புடன் ஒரு பயங்கரவாதி, தேச துரோகி பேசுவதாகவும் குறிப்பிட்டு இருந்தார். அவரது இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்த பாஜக மாநில பொதுச் செயலாளர் ஏ பி முருகானந்தம் தலைமையிலான இருபதுக்கும் மேற்பட்டோர் காவல் ஆணையரிடம் தாம்பரம் யாகூப் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஏ பி முருகானந்தம், பொதுவெளியில் மனிதநேய மக்கள் கட்சி துணைப் பொதுச் செயலாளர் தாம்பரம் யாகூப் பாஜக ஒருங்கிணைப்பாளர் எச். ராஜாவுக்கு கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் கண்டிக்கத்தக்கது எனவும் கடந்த 15ஆம் தேதி இந்த சம்பவம் நடைபெற்றும் தற்போது வரை எந்த ஒரு கைது நடவடிக்கையையும் காவல்துறை மேற்கொள்ளாதது கண்டிக்கத்தக்கது எனவும் கூறினார்.
மேலும் உடனடியாக காவல்துறையினர் தாம்பரம் யாக்கூபை கைது செய்ய வேண்டும் எனவும் ஏற்கனவே தனக்கு கொலை மிரட்டல் வருவதாக காவல் துறையினரிடம் புகார் அளித்தும் தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் சுட்டிக்காட்டினார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துள்ளதாகவும் தமிழ்நாடு கொலைகார மாநிலமாகவும் போதை கலாச்சாரம் மிகுந்த மாநிலமாகவும் இருப்பதாக விமர்சித்த அவர், மக்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை என்றும் பட்டப் பகலில் பொது இடங்களில் கொலைகள் நடப்பதாகவும் சுட்டிக்காட்டினார்…..