காங்கிரஸ் கட்சி, அதானி குழுமத்தின் பங்குச் சந்தை முறைகேடு குறித்த புகாரை விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைக்க வேண்டும் என்றும், செபி (SEBI) தலைவா் மாதபி புரி புச்சை பதவி விலகக் கோரியும், ஆகஸ்ட் 22-ஆம் தேதி நாடு தழுவிய போராட்டத்தை நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.
மேலும், நாடு முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பை முன்னெடுக்க பிரசாரத்தை தொடங்கவுள்ளதாகவும் காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.
மகாராஷ்டிரா, ஹரியாணா, ஜார்க்கண்ட் மாநிலங்களில் இவ்வாண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகள், மற்றும் தேர்தல் தயாரிப்புகளை விவாதிக்க, காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலர்கள் மற்றும் மாநிலத் தலைவர்கள் தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் கலந்துரையாடினர்.
இந்த கூட்டத்தில், காங்கிரஸ் தலைவா் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தின் முடிவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், அதானி பங்குச் சந்தை முறைகேடு விசாரணை, ஜாதிவாரி கணக்கெடுப்பு, பொருளாதாரம், அரசியல் மற்றும் சமூக நீதி தொடர்பான அரசமைப்புச் சட்ட விதிகளை பின்பற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டது. மேலும், அதானி விவகாரம் தொடர்பாக ஆகஸ்ட் 22-ஆம் தேதி நாடு தழுவிய போராட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.