கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் நென்மாரா அருகே உள்ள நெல்லியம்பதி பகுதியைச் சேர்ந்த சுஜய் சர்தாரின் மனைவி சாம்பா, இரவில் ஏற்பட்ட பிரசவ வலியால் ஜீப்பிலேயே ஆண் குழந்தையை பிரசவித்தார்.
சாம்பாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டதும், கணவர் சுஜய் அவரை ஜீப்பில் நெல்லியம்பதி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றார். காட்டு வழியாக பயணித்த போது, பிரசவ வலி அதிகரித்ததால் ஜீப்பிலேயே குழந்தை பிறந்தது.
அதன்பின், சுகாதார பணியாளர்கள் சுதினா மற்றும் ஜானகி மருத்துவரின் ஆலோசனைப்படி ஜீப்பிலேயே தொப்புள் கொடியை அறுத்து முதல்கட்ட சிகிச்சைகள் அளித்தனர்.
சாம்பாவையும் குழந்தையையும் அருகிலுள்ள நென்மாரா சமூக நல மையத்திற்கு கொண்டு செல்லும் முயற்சியில், அவர்கள் பயணித்த ஜீப்பை காட்டு யானை ஒன்று வழிமறித்தது. யானையை கண்ட அனைவரும் பீதியில் உறைந்தனர்.
வனத்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டு, இரண்டு மணி நேரத்திற்கு பிறகு யானை காட்டுக்குள் சென்று விட்டது. அதன்பின் வனத்துறை உதவியுடன், சாம்பா மற்றும் அவரது குழந்தை பாதுக்காப்பாக மீட்கப்பட்டனர்.
சாம்பா மற்றும் அவருடைய ஆண் குழந்தை முதலில் நென்மாரா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு பின்னர் பாலக்காடு பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். தாயும் சேயும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.