பிரான்ஸ் நாட்டு ஐரோப்பிய மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு புதுச்சேரியில் கடந்த மாதம் நடைபெற்றது. புதுச்சேரி, காரைக்கால், சென்னை, கேரளப் பகுதிகளிலும் அதற்கான வாக்குப்பதிவு பிரான்ஸ் நாட்டுத் தூதரகம் சார்பில் நடத்தப்பட்டது. அதன்படி பிரான்ஸில் ஜோர்டான்பார்டிலா கட்சியானது 31.7 சதவிகித வாக்குகளைப் பெற்றது. அதையடுத்து அக்கட்சிக்கு 30 உறுப்பினர்கள் தேர்வாகினர். அக்கட்சிக்கு அடுத்ததாக பிரான்ஸின் தற்போதைய அதிபர் இமானுவேல் மேக்ரான் கட்சியானது 13.83 சதவிகித வாக்குகளைப் பெற்றது. அக்கட்சிக்கு 13 உறுப்பினர்கள் தேர்வாகினர். இமானுவேல் மேக்ரான் கட்சியின் உறுப்பினர் குறைவாக தேர்வான நிலையில் பிரான்ஸ் ஐரோப்பிய மக்களவை கலைக்கப்பட்டது. அதையடுத்து அதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு அதற்கான முற்கட்ட வாக்குப்பதிவு கடந்த மாதம் 30-ம் தேதி நடைபெற்றது. புதுச்சேரியில் பிரான்ஸ் குடியுரிமை பெற்ற 4,550 பேர் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. புதுச்சேரியில் உள்ள பிரான்ஸ் துணை தூதரகத்தில் வாக்களிக்க உரிமை பெற்றவர்கள் தங்களது அடையாள அட்டையைக் காட்டி வாக்குகளைச் செலுத்தினர்.
இந்நிலையில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. புதுச்சேரியில் காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரையில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. காரைக்கால், சென்னை ஆகிய இடங்களிலும் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வாக்குரிமை உள்ள பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள் தங்களின் வாக்கை ஆர்வமுடன் பதிவு செய்து வருகின்றனர்.