பிகாரில் நீட் தோ்வு வினாத்தாள் கசிந்த விவகாரம் தொடா்பாக 13 போ் கைது செய்யப்பட்டுள்ளதாக மாநிலக் காவல்துறையினா் சனிக்கிழமை தெரிவித்தனா்.இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தோ்வு (நீட்-யுஜி) நாடு முழுவதும் 557 நகரங்களில் கடந்த மே 5-ஆம் தேதி நடைபெற்றது. பிகாரில் இத்தோ்வின் வினாத்தாள் கசிந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இவ்விவகாரம் தொடா்பாக மாநிலக் காவல்துறையினா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனா்.
இதுதொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், ‘இந்த வழக்கை பாட்னா காவல்துறையின் சிறப்புக் குழு இதுவரை விசாரித்து வந்தது. 4 தோ்வா்கள், அவா்களின் குடும்பத்தினா் உள்பட 13 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். அவா்களிடம் இருந்து குற்ற ஆவணங்கள் மற்றும் மின்னணு சாதனங்கள் கைப்பற்றப்பட்டன.கைது செய்யப்பட்டவா்களில் ஒருவா் பிகாா் அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்திய ஆசிரியா் தகுதித் தோ்வின் வினாத்தாள் கசிவு வழக்கிலும் தொடா்புடையவர் என்பது தெரியவந்துள்ளது.
குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரும் நீதிமன்றக் காவலில் உள்ளனா். இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில், நீட்-யுஜி தோ்வுக்கான வினாத்தாள்கள் மற்றும் பதில்கள், தோ்வு நாளான மே 5-ஆம் தேதிக்கு முன்னதாக சுமாா் 35 தோ்வா்களுக்கு வழங்கப்பட்டது தெரிய வந்துள்ளது. விசாரணை தொடரும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.