
தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 7.5% மருத்துவ இட ஒதுக்கீட்டை 10% ஆக உயர்த்த அரசுத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அவர் கூறுகையில், “நீட் தேர்வு மாணவர்களின் மனநிலையை சீர்குலைக்கும் கொடுமையான தேர்வாக இருக்கிறது. திருமண தாலியை கழட்டி வைத்துவிட்டு நீட் எழுதச் சொல்வது வரலாற்றிலேயே இல்லாத அத்துமிரல்,” எனக் கூறினார்.
மருத்துவக் கல்வியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டை 10% ஆக உயர்த்தும் முன்முயற்சியை சட்ட ரீதியாக ஆய்வு செய்து முடிவெடுக்க முதல்வர் நடவடிக்கை எடுப்பார் என்றும் அவர் தெரிவித்தார். இந்த உயர்வு செயல்படுத்தப்படும்போது சிலர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர வாய்ப்பு இருப்பதால், சட்ட வல்லுநர்களின் ஆலோசனை பெறப்படும் எனவும் கூறினார்.
மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தை உறுதி செய்ய தமிழக அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இலவச கல்வி, கல்வி உதவித்தொகை, இலவச பேருந்து பயணம், காலை மற்றும் மதிய உணவு திட்டம் உள்ளிட்டவை அதன் ஒரு பகுதி. உயர்கல்விக்கு உதவிடும் வகையில் ‘தமிழ் புதல்வன்’ மற்றும் ‘புதுமைப்பெண்’ திட்டங்களின் கீழ் மாதம் ரூ.1000 உதவித்தொகையும் வழங்கப்படுகிறது.
மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் நடைமுறை கடந்த அதிமுக ஆட்சியில் அறிமுகமாகியது. அதன் மூலம் நூற்றுக்கணக்கான மாணவர்கள் மருத்துவக் கல்வியில் சேர்ந்துள்ளனர். இந்நிலையில் தற்போது இட ஒதுக்கீட்டை மேலும் விரிவாக்கும் முயற்சி தமிழக அரசால் மேற்கொள்ளப்படுகிறது.