பேங்க் ஆப் இந்தியாவின் உலகளாவிய வணிகம் ரூ. 13.64 லட்சம் கோடியை எட்டியுள்ளதாகவும், அடுத்த மூன்று ஆண்டுகளில் அதை ரூ. 18 லட்சம் கோடியாக அதிகரிக்க திட்டமிட்டிருப்பதாகவும், பேங்க் ஆப் இந்தியாவின் நிர்வாக இயக்குனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ரஜ்னீஷ் கர்நாடக் கோவையில் தெரிவித்தார்.
கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள ஓட்டல் அரங்கில், பேங்க் ஆப் இந்தியாவின் வர்த்தக மேம்பாடு குறித்து கோவை மண்டல கூட்டம் நடைபெற்றது. இதில் கோவை மற்றும் சென்னை மண்டலத்தைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய ரஜ்னீஷ் கர்நாடக், வங்கியின் வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் வணிக மேம்பாட்டை அதிகரிப்பதற்கான முயற்சிகள் குறித்து ஆலோசனைகளை வழங்கினார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், வங்கியின் பல்வேறு திட்டங்கள், டிஜிட்டல் மயமாக்கலின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து விளக்கினார். 2024 ஆம் ஆண்டு கணக்கின் படி, வங்கியின் உலகளாவிய வணிகம் ரூ. 13.64 லட்சம் கோடியை எட்டியுள்ளதாகவும், வரும் மூன்று ஆண்டுகளில் அதை ரூ. 18 லட்சம் கோடியாக உயர்த்துவதற்கான திட்டத்தை பற்றி விவரித்தார்.
பேங்க் ஆப் இந்தியா தனது 119வது நிறுவனர் தினத்தை கொண்டாடியதன் அடிப்படையில், இந்திய அஞ்சல் துறையால் ஒரு சிறப்பு முத்திரை வெளியிடப்பட்டது, இது வங்கியின் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் பெருமைமிக்க தருணம் எனவும் அவர் குறிப்பிட்டார். குறிப்பாக, கோவை மண்டலத்தில் MSME மற்றும் கார்ப்பரேட் ஃபைனான்ஸ் துறைகள் வேகமாக வளர்ந்து வருவதாகவும், இங்கு வணிகத்தை மேம்படுத்த கடன் வழங்குதல் முன்னுரிமையாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கூட்டத்தில் பேங்க் ஆப் இந்தியாவின் கோவை மண்டல அதிகாரிகள், ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர். மேலும், ரஜ்னீஷ் கர்நாடக், கோவை, சென்னை, மதுரை, திருவனந்தபுரம், மற்றும் எர்ணாகுளம் மண்டல ஊழியர்களுடன் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் வங்கியின் வளர்ச்சி குறித்தும் விவாதித்தார்.