அவிநாசி மேம்பாலம் சுரங்கப்பாதையில் மழை நீர் தேங்காதவாறு புதிதாக கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கோவை உப்பிலிபாளையம் சந்திப்பில் உள்ள அவிநாசி மேம்பாலம் மற்றும் வஉசி பூங்கா பகுதிகளில் மழை நீர் தேங்குவதால், அதை அகற்றும் நோக்கில் புதிய கால்வாய் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகளை கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் மற்றும் கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்து பேசிய கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார், கோவை மாநகரில் மழை நீர் தேங்குவது தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அவிநாசி மேம்பாலம் சுரங்கப்பாதையில் ஏற்கனவே கிரில் அமைத்து மழை நீர் வெளியேற்றும் பணி நடைபெற்று வருவதாகவும் கூறினார்.
அதுபோல, சிவானந்தா காலனி ஏஆர்சி சுரங்கப்பாதை மற்றும் செம்மொழி பூங்கா பகுதிகளில் மழை நீரை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இதனால் மழைநீர் பாதிப்பு குறைவடையும் என உறுதி அளித்தார்.
அவிநாசி மேம்பாலம் சுரங்கப்பாதையில் புதிதாக அமைக்கப்படும் இந்த கால்வாய், மழைநீரை வெளியேற்ற உதவும். மேலும், ஏஆர்சி மேம்பாலத்தின் கீழே இருக்கும் சாலையில் இதே மாதிரியான வாய்க்கால்கள் அமைக்கப்பட்டு, மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்தப் பணிகள் 15 நாட்களில் முடிவடையும் என்றாலும், மழை காலம் என்பதால் இரவில் முழுநேரமும் பணிகள் நடைபெறுகின்றன. அடுத்த ஆண்டு பருவமழை காலத்தில் எந்த விதமான பிரச்சனையும் ஏற்படாதவாறு இப்பணிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் கூறினார்.
மேலும், சாக்கடை கால்வாய்களில் அடைப்பு ஏற்படாமல் தடுக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், சில இடங்களில் திறந்து இருப்பதால் மட்டுமே அடைப்பு ஏற்படுகிறது எனவும் கூறினார். முக்கிய கால்வாய் பகுதிகள் மற்றும் குளங்களில் இருந்து தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அதே நேரத்தில், மழை அதிகரித்து குடியிருப்பு பகுதிகள் பாதிக்கப்படுமானால், பொதுமக்களை தங்கவைக்கும் மையங்கள் தயார் நிலையில் உள்ளன. கோவை மாநகராட்சியில் 76 மையங்கள் மற்றும் புறநகரில் 66 மையங்கள் தயார் நிலையில் உள்ளன. பொதுமக்கள் தங்கும்போது, அவர்களுக்கு தங்கும் வசதி மற்றும் உணவு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும்.
மழைநீர் நொய்யல் ஆற்றில் செல்கின்ற பாதைகள் மற்றும் வெளியேறும் பாதைகள் குறித்து ஆராய்ந்து, அவற்றின் மேல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். மேலும், கோவை மாவட்டத்தில் 24 மணி நேரம் வாகன வசதி தயார் நிலையில் உள்ளது, தேவைக்கு ஏற்ப அதை பயன்படுத்துவோம் என்றார்.