விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் நடந்த விபத்தில் பணியில் இருந்த ஊழியர் உயிரிழந்தார். கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 31 வயதான கணேசன், விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் பணியாற்றி வந்தார். சம்பவம் நிகழ்ந்த போது, அவர் திருச்சிக்கு செல்லும் வழியில் பணியில் இருந்தார். சென்னையிலிருந்து திருச்சி நோக்கி வந்த காரிடம் சுங்கவரி வசூலிக்கிறார்.
அதே நேரத்தில், காருக்கு பின்னால் நின்றிருந்த லாரி மற்றும் அதன் பின்புறம் வந்த முட்டை லாரி ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து, சுங்கச்சாவடி வழி எண் 4-ல் நின்ற லாரி மீது மோதியது. இந்த மோதலில், லாரி மீண்டும் காரின் மீது மோதியதால், கணேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இன்னொரு ஊழியர் மணிகண்டன் காயம் அடைந்தார். அவரை உடனடியாக மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
விக்கிரவாண்டி போலீசார் விபத்து நடந்த இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். விபத்தை ஏற்படுத்திய முட்டை லாரி டிரைவரான திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த முத்துக்குமாரை (29) கைது செய்து விசாரிக்கின்றனர்.
சுங்கச்சாவடியில் உள்ள ஊழியர்கள் அங்குள்ள பூத்தில் அமர்ந்து பணிபுரியாமல் வெளியே நின்று பணியாற்றுவதால் இந்த விபத்து நடந்ததாக, மற்ற ஊழியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சுங்கச்சாவடி நிர்வாகத்தின் அலட்சியமும் இந்த விபத்திற்கு காரணம் என்று அவர்கள் கூறினர்.
விபத்தில் பலியான கணேசனுக்கு, மனைவி அஞ்சலை தேவி, மகன் ஹரிஷ் மற்றும் மகள் ரித்திஷா ஆகியோர் உள்ளனர். இந்த சோகம், அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.