தேவகோட்டை அருகே பள்ளிக் குழந்தைகளை ஏற்றி வந்த வேன், இருசக்கர வாகனத்தை மோதியதில் கூலித் தொழிலாளி இருவர் உயிரிழந்தது. இந்த சம்பவம் அப்பகுதியினரை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
கண்ணங்குடியில் இருந்து தேவகோட்டைக்கு பள்ளி குழந்தைகளை அழைத்துச் சென்ற வேன், சிறுவாச்சி சாலை ஞான ஒளிபுரம் பகுதியில் சென்றுகொண்டிருந்த போது எதிரே வந்த இருசக்கர வாகனத்தை மோதி விபத்திற்குள்ளானது.
இந்த இருசக்கர வாகனத்தில் தஞ்சாவூர், கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் (37), பழனி (45), பிரகாஷ் (30) ஆகியோர் பயணம் செய்தனர். வேன் மோதியதில் முத்துகிருஷ்ணன் மற்றும் பழனி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
பிரகாஷ் படுகாயமடைந்து உயிருக்கு போராடிய நிலையில், அப்பகுதி கிராம மக்கள் அவரை மீட்டு தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தகவல் அறிந்து தேவகோட்டை காவல் துணை கண்காணிப்பாளர் கெளதம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வழக்குப்பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து, வேன் ஓட்டுநர் பன்னீர் வீரப்பன் (39), என்பவரை கைது செய்து மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உயிரிழந்த தொழிலாளர்கள், நெல் அறுவடை வேலை காரணமாக தேவகோட்டை பகுதியில் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் வைக்கோல் கொள்முதல் செய்ய வந்திருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்தது.கூலித் தொழிலாளி இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.