தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள கும்பக்கரை அருவியில் கடந்த வாரங்களில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் நீர்பிடிப்பு பகுதிகளான கொடைக்கானல், வட்டக்கானல், பாம்பார்புரம், வெள்ளகவி உள்ளிட்ட இடங்களில் பெய்த மழையால் நீர்வரத்து அதிகரித்தது.
வெள்ளப்பெருக்கால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி வனத்துறையினர் கடந்த 13 ஆம் தேதி முதல் குளிக்க தடை விதித்தனர். நீர்வரத்து தொடர்ந்து அதிகமாக இருந்ததால் 8 நாட்களாக இந்த தடை நீடிக்கப்பட்டது.
நேற்று வெள்ளப்பெருக்கு குறைந்து நீர்வரத்து சீராகியதால், சுற்றுலா பயணிகள் கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். இன்று விடுமுறை தினம் என்பதால், பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வெகுவாக வந்தனர்.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களும் கும்பக்கரை மற்றும் சுருளி அருவிகளில் நீராடி செல்வதால் அருவி பகுதியில் கூட்டம் அலைமோதியது. பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்து கொட்டிய தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர்.
அணைகளின் நிலவரம்:
முல்லைப்பெரியாறு அணை:
நீர்மட்டம்: 129.70 அடி
வரத்து: 913 கனஅடி
திறப்பு: 1400 கனஅடி
இருப்பு: 4633 மி.கனஅடி
வைகை அணை:
நீர்மட்டம்: 64.40 அடி
வரத்து: 1808 கனஅடி
திறப்பு: 1669 கனஅடி
மஞ்சளாறு அணை:
நீர்மட்டம்: 55 அடி
வரத்து: 43 கனஅடி
திறப்பு: 90 கனஅடி
சோத்துப்பாறை அணை:
நீர்மட்டம்: 126.28 அடி (முழு கொள்ளளவு)
வரத்து மற்றும் திறப்பு: 31.29 கனஅடி
சண்முகாநதி அணை:
நீர்மட்டம்: 52.30 அடி
வரத்து: இல்லை
திறப்பு: 14.47 கனஅடி
மழை அளவு:
வைகை அணையில் மட்டும் 3.4 மி.மீ மழை பதிவாகியுள்ளது.