தமிழ்நாட்டில் உள்ள மலைப்பகுதிகளில், குறிப்பாக நீலகிரி, வால்பாறை, கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி போன்ற பகுதிகளில் பெருமழைக்காலங்களில் ஏற்படக்கூடிய இயற்கை இடர்பாடுகளை ஆய்வு செய்ய தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இந்த ஆய்வை, வனத்துறை, புவிசார் அறிவியல் துறை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, சுற்றுச்சூழல் துறை போன்ற பல்துறை வல்லுநர்கள் இணைந்து நடத்த உள்ளனர்.
இந்த ஆய்வு, மாநிலப் பேரிடர் மேலாண்மைத் துறையின் மூலம் அறிவியல் அடிப்படையில் விரிவாக நடைபெறும். அதன்படி, எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய இயற்கை இடர்பாடுகளை முன்னதாகவே கண்டறிந்து, தடுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும். மேலும், நீண்டகால அடிப்படையில் ஆபத்துகளை குறைக்கும் நோக்கில் ஆட்சிமுறை நடவடிக்கைகள் குறித்த பரிந்துரைகள் குழுவினால் வழங்கப்படும். இந்த பரிந்துரைகளின் அடிப்படையில், தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்குமென முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.