
கோவை: கோவை மாநகராட்சியில் நடைபாதை வியாபாரம் செய்யும் சாலையோர வியாபாரிகள், தீபாவளி காலத்தில் தங்களின் கடைகளை அகற்றக் கூறும் அதிகாரிகள் நடவடிக்கைகளை கண்டித்து, மாவட்ட ஆட்சியரிடம் மடிப்பிச்சை கேட்டு மனு அளித்தனர்.
கோவை நடைபாதை வியாபாரிகள் சங்கம் சார்பில், 30க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மனு அளித்தனர். “நாங்கள் யாருக்கும் தொந்தரவு செய்யாமல், நடைபாதையில் வியாபாரம் செய்து வருகின்றோம். ஆனால், காவல்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் எங்கள் கடைகளை அகற்றக் கூறுகின்றனர். இது எங்கள் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதிக்கிறது, குறிப்பாக தீபாவளி மாதங்களில் இந்நடவடிக்கை எங்களுக்கு மிகுந்த இழப்பை ஏற்படுத்துகிறது,” என வியாபாரிகள் தெரிவித்தனர்.
மேலும், கோவை மாநகராட்சி பகுதியில் சுமார் 15,000க்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகள், மாநகராட்சியின் பதிவு அடையாள அட்டையை வைத்தும், விற்பனைச் சான்றிதழையும் பெற்றுள்ளனர். உச்ச நீதிமன்றம் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் உத்தரவின்படி, நாட்டின் பல பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கான திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. சென்னை, மதுரை, திருப்பூர் போன்ற நகரங்களில் திட்டத்தின் கீழ் தள்ளுவண்டி வியாபாரிகளுக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் கோவை மாநகராட்சி இதுவரை எந்த திட்டத்தையும் நடைமுறைப்படுத்தவில்லை.

கோவை மாநகராட்சி 2016-17ம் ஆண்டில் வழங்கிய அடையாள அட்டைகள் காலாவதியான நிலையில் உள்ளன. இதனால், புதிய அடையாள அட்டைகள் மற்றும் விற்பனை சான்றுகள் வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 2024ம் ஆண்டிற்கான புதிய அடையாள அட்டைகள் வழங்க வேண்டும் எனவும், மாநிலத்தில் உள்ள அனைத்து திட்டங்களும் எங்களுக்கும் கிடைக்க வேண்டும் என வியாபாரிகள் மனு அளித்தனர்.
இதற்கு முன்பாக, மாநகராட்சி ஆணையர் சிவகுருபிராபகரனிடம் கடைகள் அகற்றுவதை தடுக்க கோரியும் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த மனுவில், கோவை மாவட்டம் மற்றும் மாநகராட்சி சாலையோர வியாபாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் மணி, செயலாளர் உபைதுரஹ்மான், பொருளாளர் கரிகாலன் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கலந்து கொண்டனர்.
