கோவை மாவட்டத்தில் உள்ள தென்னை விவசாயிகளுக்கு விரைவில் நிவாரணம் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி உறுதியளித்தார்.
பொள்ளாச்சி அருகே சமத்தூர் பேரூராட்சியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டு தோட்டக்கலைத் துறை, வேளாண் துறை, சமூக நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை சார்பில் அமைக்கப்பட்ட கண்காட்சியை தொடங்கி வைத்தார். மேலும், 275 பயனாளிகளுக்கு ரூ.89.80 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர், வேர் வாடல் போன்ற நோய்கள் காரணமாக வெட்டப்பட்ட தென்னை மரங்களுக்கு தமிழக முதல்வர் ரூ.18 கோடி நிதி ஒதுக்க உத்தரவிட்டுள்ளதாகவும், ரூ.13 கோடி நிதி ஏற்கனவே பெறப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டதாகவும் கூறினார். மேலும், மீதமான ரூ.5 கோடி நிதி அரசிடம் கோரப்பட்டுள்ளதாகவும், அனைத்து தென்னை விவசாயிகளுக்கும் விரைவில் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்தார்.