பொள்ளாச்சி அடுத்த மேற்கு மலைத்தொடர்ச்சி மலைப் பகுதியில் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது கவியருவி இங்கு பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் அதிக அளவு சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம்.
இந்நிலையில் தீபாவளியை ஒட்டி தொடர் விடுமுறை விடப்பட்டு இருந்தது இன்றுடன் விடுமுறையின் கடைசி நாள் என்பதால் உள்ளூர் மட்டுமின்றி வெளியூரில் இருந்தும் இயற்கை எழில் சூழ்ந்த ஆழியாறு கவியருவியில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் ஆனந்த குளியலிட்டும் புகைப்படம் மற்றும் செல்ஃபியும் எடுத்தும் வருகின்றனர்.
கூட்ட நெரிசல் அதிகமாக இருப்பதால் அருவியில் குளிக்க முடியாத சில சுற்றுலா பயணிகள் அருவியில் இருந்து கீழே வரும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் வால்பாறை மற்றும் கவியருவி செல்ல நுழைவு கட்டணம் வாங்குவதற்காக ஆழியார் வனத்துறை சோதனை சாவடியில் இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து கூட்டம் அதிகரித்து வருவதாலும், பாதுகாப்பு கருதியும் வனத்துறையினர் மற்றும் போலீசார் தற்பொழுது பாதுகாப்பு பணியிலும் போக்குவரத்தை சீர் செய்யும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.