
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி, பொள்ளாச்சி-வடக்கிபாளையம் சாலையில் நாட்டு இன காளை மாடுகளுக்கான ரேக்ளா மாட்டு வண்டி போட்டிகள் சீராக நடத்தப்பட்டன. இந்த போட்டியில் தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து நாட்டு இன காளைகளுடன் பல போட்டியாளர்கள் பங்கேற்றனர்.



போட்டிகள் இரண்டு பல், நான்கு பல் என வயது அடிப்படையிலும், 200 மீட்டர், 300 மீட்டர் தூரத்தில் நடந்தன. இதில், காங்கேயம் இன காளைகள், கர்நாடகா லம்பாடி காளைகள் உட்பட 1000 காளைகள் போட்டியிட்டன.



வெற்றி பெற்ற காளைகளுக்கு முதல்பரிசாக 1 லட்சம் ரூபாய், இரண்டாம் பரிசாக 50,000 ரூபாய், மூன்றாம் பரிசாக 30,000 ரூபாய் வழங்கப்பட்டது. மேலும், வெற்றி பெறும் காளைகளுக்கு தங்கம், வெள்ளி நாணயங்கள் மற்றும் பரிசு கோப்பைகள் வழங்கப்பட்டன.



அதிகாரிகள், கிழக்கு மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகளை விதிமுறைகளுடன் ஏற்று நடத்துவது போல, மேற்கு மாவட்டங்களில் நடைபெறும் ரேக்ளா மாட்டு வண்டி போட்டிகளையும் அரசு ஏற்று நடத்த வேண்டும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

