
பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையில் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்துவிட்டு நகையை பறித்த சம்பவத்தில், ஆனைமலை போலீசார் இரண்டு பெண்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இவர்களிடமிருந்து 4.5 பவுன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பாக, ஆனைமலை குயவர் வீதியில் வசிக்கும் 56 வயதான சாந்தி, கூலி வேலை செய்துக் கொண்டிருந்தார். சாந்தியின் பக்கத்து வீட்டில் வசித்து வரும் லோகநாயகி மற்றும் மகேஸ்வரி ஆகியோர்கள், அவரை ஆட்டோவில் அழைத்து, பணம் வாங்கி தருவதாக கூறி, ஆழியாறு செல்லும் வழியில் உள்ள நா.மு.சுங்கம் பகுதியில் உள்ள பேக்கரிக்கு எடுத்துச் சென்றனர். அங்கு, லோகநாயகி மற்றும் மகேஸ்வரி சாந்திக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்தனர்.
இதனால் மயங்கி விழுந்த சாந்தியின் நகைகளை கழற்றி, உடுமலைப்பேட்டை செல்லும் வழியில் கீழே தள்ளி விட்டனர். அப்போது பொதுமக்கள் சாந்தியை மயங்கி கிடந்ததை பார்த்து, உடுமலைப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுப்பினர். கண் திறந்தவுடன், அவர் அணிந்திருந்த நகைகளை காணாமல் போனதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
இதையடுத்து, சாந்தி ஆனைமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். விசாரணையில், லோகநாயகி மற்றும் மகேஸ்வரி ஆகியோர் மயக்க மருந்து கொடுத்து நகைகளை பறித்தது தெரியவந்தது. போலீசார் இருவரையும் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.