கோவை: கோவையில் ரூ. 10,740 கோடியில் 34.8 கிலோமீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் மேலாண்மை இயக்குநர் எம்.ஏ. சித்திக் தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களுடன் பேசிய அவர், “மெட்ரோ ரயில் திட்டத்திற்கான கூடுதல் விவரங்களை மத்திய அரசிடம் சமர்ப்பித்துள்ளோம். மத்திய அரசின் ஒப்புதலுக்குப் பின், மூன்று ஆண்டுகளுக்குள் திட்டத்தை நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது,” என்றார்.
கோவை மற்றும் மதுரை மெட்ரோ திட்டங்கள் ஒருங்கிணைந்த திட்டமாக செயல்படுத்தப்படவுள்ளதாகவும், கோவையில் ரூ. 10,740 கோடியும் மதுரையில் ரூ. 11,430 கோடியும் செலவிடப்படும் எனவும் கூறினார்.
கோவையில் 2 வழித்தடங்களுடன் செயல்படும் மெட்ரோ திட்டத்திற்காக 16 ஹெக்டேர் நிலம் தேவைப்படும். நிலம் கையகப்படுத்தல் பணிகள் மத்திய அரசின் ஒப்புதலுக்குப் பிறகு துரிதமாக நடைபெறும் எனவும் அவர் தெரிவித்தார்.
மதுரையில் பூமிக்கு அடியில் ரயில்கள் செல்லும் வகையில் பணிகள் திட்டமிடப்பட்டுள்ளன. இதனால், மதுரையைவிட கோவையில் பணிகள் வேகமாக நிறைவு பெறும் என்று எம்.ஏ. சித்திக் நம்பிக்கை தெரிவித்தார்.