நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு பொது மக்களிடம் கொலு வழிபாட்டின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், பொள்ளாச்சியில் விவேகானந்த கலை நற்பணி மன்றம் மற்றும் ஆர்ஷ வித்யா பீடத்தின் சார்பில் கடந்த அக்டோபர் 2ம் தேதி முதல் நவராத்திரி திருவிழா நிகழ்வுகள் நடைபெற்றன. 10ம் நாள் முக்கிய நிகழ்வாக, மகிஷாசுரனை அம்பாள் வதம் செய்யும் நிகழ்ச்சி நேற்று சிறப்பாக நடந்தது.
இந்நிகழ்வுக்காக 30 அடி உயரம் கொண்ட பிரம்மாண்ட மகிஷாசுரன் சிலை அமைக்கப்பட்டது. மாலை நேரத்தில், துர்க்கை அம்மன் சிவபெருமானிடம் அனுமதி பெற்று சூலாயுதம் பெறும் நிகழ்வு நடைபெற்றது. அதன் பின்னர் மேளதாளங்களுடன், அம்மன் மகிஷாசூரனை வதம் செய்யும் நிகழ்வு மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் இதில் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கோவை கவுமார மடம் சிரவை ஆதீனம் ராமானந்தா குமர குருபர சுவாமிகள், செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில், “மகிஷாசுரனை அழித்து உலகில் நன்மையை வளர்க்க வேண்டும். இன்றைய சூழலில் உலகம் பல்வேறு அச்சங்களால் சிக்கியுள்ளதால், தாயின் அருளால் அவைகள் நீங்கி, மக்கள் அமைதியான வாழ்க்கையை வாழ வேண்டும்” என தெரிவித்தார்.