வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனைத் தொடர்ந்து, சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுபள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி, ராமேஸ்வரம், குளச்சல் ஆகிய 9 துறைமுகங்களில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இந்த மண்டலம் அடுத்த 2 நாட்களுக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழ்நாடு மற்றும் இலங்கை கடலோரத்தை நோக்கி நகரும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக நாகை, ராமேஸ்வரம், புதுக்கோட்டை, கடலூர் உள்ளிட்ட மாவட்ட மீனவர்கள் மறு அறிவிப்பு வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் எனவும், இடையிடையே 55 கிலோமீட்டர் வேகத்தை எட்டக்கூடும் என்பதால் மீனவர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.
வானிலை மையம் அறிவித்ததின் படி, நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் ஆகிய டெல்டா மாவட்டங்களுக்கு நவம்பர் 26 அன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல், மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்டங்களுக்கு நவம்பர் 27 அன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.
மழைக்கு எதிராக தேவையான முன்னெச்சரிக்கைகள் செய்யப்பட்டுள்ளதாகவும், எதற்கும் அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக மக்களுக்கு வானிலை மையம், அனேகமான இடங்களில் அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.