தீபாவளி சிறப்பு கண்காட்சி ‘கோ கிளாம்’ கோவை அவினாசி சாலையில் உள்ள சுகுணா மண்டபத்தில் இன்று தொடங்கியது. இந்த தீபாவளி சிறப்பு விற்பனை கண்காட்சியில் பெண்கள், குழந்தைகள் மற்றும் வீட்டு அலங்கார பொருட்கள் போன்றவை விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. மூன்று நாட்கள் நடைபெற உள்ள இந்த கண்காட்சியில் 100-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
கண்காட்சி துவக்க விழாவில் கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத் தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக், பவித்ரா ராகவ், மித்ரா பிரசாத் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு கண்காட்சியைத் தொடங்கி வைத்தனர். ஒருங்கிணைப்பாளர்கள் ஹீனா மற்றும் ராகுல், இந்த தீபாவளி சிறப்பு விற்பனை கண்காட்சி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த ஆடைகள், நகைகள், அழகுக்கலைப் பொருட்கள், இயற்கை அழகு சாதனங்கள், கைவினை பொருட்கள் போன்றவை விற்பனைக்கு உள்ளதாக தெரிவித்தனர்.
கோவை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள், தீபாவளி க்கான ஆடைகள், பரிசுப் பொருட்கள் வாங்க ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.