ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே காஞ்சிகோவில் பகுதியில் வசிக்கும் தனசேகரன் என்பவர், பள்ளபாளையம் பேரூராட்சியின் தண்ணீர்பந்தல் பாளையத்தில் உள்ள தனது தாயின் பெயரில் இருந்த பட்டாவை தனது பெயருக்கு மாற்றம்செய்ய முயற்சித்துள்ளார்.
இதற்காக பெருந்துறை துணை வட்டாட்சியர் நல்லசாமியை அணுகிய தனசேகரனிடம், பட்டா பெயர் மாற்றத்திற்காக 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தத் தொகையை பள்ளபாளையம் கிராம நிர்வாக அலுவலர் சரத்குமாரிடம் கொடுக்க சொல்லியுள்ளார்.
தனசேகரன், ஈரோடு லஞ்ச ஒழிப்பு காவல்துறையிடம் புகார் அளித்ததை தொடர்ந்து, காவல்துறையினர் ரசாயனம் தடவிய பணத்தை சரத்குமாருக்கும், நல்லசாமிக்கும் வழங்க ஏற்பாடு செய்தனர்.
பணம் வழங்கும் தருணத்தில் இருவரையும் காவல்துறையினர் பிடித்து, மூன்று மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினர். பின்னர், 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக உறுதி செய்யப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் சரத்குமார் மற்றும் பெருந்துறை துணை வட்டாட்சியர் நல்லசாமி ஆகியோரை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கைது செய்தனர்.