இயேசு கிறிஸ்துவின் பிறந்த நாளை முன்னிட்டு, கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று உலகமெங்கும் கிறிஸ்துவர்களால் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழகம் முழுவதும் தேவாலயங்களில் சிறப்பு ஜெபவழிபாடுகள், கூட்டுப் பிரார்த்தனைகள் நடைபெற்று வருகின்றன.
கோவை ரத்தினபுரி பகுதியில் உள்ள புனித சின்னப்பர் ஆலயத்தில், மத நல்லிணக்கத்துக்கு உதவும் வகையில், கிறிஸ்துமஸ் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது.
பல் சமய நல்லுறவு இயக்கம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்து, இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்துவர்கள் ஒன்றிணைந்து கேக் வெட்டி, கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.
சிறப்பு வழிபாட்டிற்கு ஆலயத்திற்கு வந்த பொதுமக்கள், குழந்தைகள், மற்றும் பெரியவர்களுக்கு மூன்று மதத்தினரும் இணைந்து பூங்கொத்து மற்றும் இனிப்புகள் வழங்கி அவர்களை வரவேற்றனர்.
சமத்துவம் மற்றும் சகோதரத்தை முன்னிறுத்தும் வகையில் அனைத்து மதத்தினரும் இணைந்து கொண்டாடிய இந்த கிறிஸ்துமஸ் விழா, அனைவரிடமும் நெகிழ்ச்சியையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.
கிறிஸ்துமஸை மத நல்லிணக்கத்துடன் கொண்டாடிய விதம் பலரிடமும் நல்லவார்த்தைகளை ஏற்படுத்தி, சகோதரத்துவத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தியது.