சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு பாலியல் வன்கொடுமை நிகழ்ந்த சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோட்டூர்புரம் காவல்நிலையத்தில் புகாரளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நேற்று முன்தினம் இரவு, தனது நண்பருடன் பேசிக் கொண்டிருந்த மாணவியை மர்மநபர்கள் இருவர் தாக்கி, பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் செய்யப்பட்டது. மர்ம நபர்கள் நண்பரையும் தாக்கியதாக கூறப்படுகிறது.
காவல்துறையினர் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள முப்பதுக்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளைப் பரிசோதித்து வருகின்றனர்.
மாணவியின் நண்பர், காவலாளிகள், மற்றும் வளாகத்தில் தங்கி பணியாற்றும் தொழிலாளிகளிடம் தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.
மேலும், வளாகத்திற்கு தண்ணீர் கேன் மற்றும் உணவுப் பொருட்களை வழங்குவோரின் விபரங்களும் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
மாணவியிடம் முதற்கட்ட விசாரணை முடிந்த நிலையில், அவர் மனநல ஆலோசனை பெறுகிறார். மேலும் விசாரணைக்கு பின்னர் அவர் மீண்டும் அறிக்கையளிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி:
“தலைநகரின் மையத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிக்கு இப்படியொரு கொடூரம் நிகழ்ந்திருப்பது வெட்கக்கேடானது. சட்டம் ஒழுங்கு கெடுப்புக்கு காரணமான திமுக அரசை கடுமையாக கண்டிக்கிறேன்.”
அண்ணாமலை:
“இந்த சம்பவம் சமூக விரோதிகளுக்கு காவல்துறையிலும் அரசிலும் பயம் இல்லாததை காட்டுகிறது. உடனடியாக குற்றவாளிகளுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.”
ராமதாஸ்:
“அண்ணா பல்கலைக்கழகம் பாதுகாப்பானது என்ற நம்பிக்கையில் மாணவிகளை அனுப்பும் பெற்றோர்கள் இச்சம்பவத்தால் அதிர்ச்சியடைந்துள்ளனர். இது பெண் கல்விக்கு தடையாக மாறக்கூடும்.”
காவல்துறையினர் இரு தனிப்படைகளை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பு மீதான கேள்விகளை எழுப்பி சமூகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.