கேரளாவில் இருந்து கொண்டு வரப்பட்ட மீன் இறைச்சி கழிவுநீர் பொள்ளாச்சி அருகே உள்ள கோமங்கலம் புதூர் தேசிய நெடுஞ்சாலையில் கொட்டப்பட்டதை பொதுமக்கள் தடுத்து நிறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த ஸ்டீபன் என்பவரின் டிஎன்75 ஏஜெ1785 என்ற வாகனம், கோழிக்கோட்டில் இருந்து தூத்துக்குடி பகுதியில் செயல்படும் எம்பிஎன் என்ற தனியார் நிறுவனம், மீன் எண்ணெய் மற்றும் கோழி தீவனங்களை தயாரிப்பதற்காக கழிவுநீரை கொண்டு சென்றது.
தூத்துக்குடியிலிருந்து கேரளா திரும்பிய போது, அந்த வாகனத்திலிருந்து கடும் துர்நாற்றம் வீசிய மீன் கழிவுநீரை கோமங்கலம் புதூர் அருகே திறந்து விட்டனர். இதைக் கண்ட பொதுமக்கள் உடனடியாக தடுத்து, வாகனத்தை கோமங்கலம் காவல் நிலையம் கொண்டு சென்றனர்.
பொதுமக்கள் கூறியதாவது, கேரளா மாநிலத்தில் மீன், கோழி இறைச்சி மற்றும் மருத்துவ கழிவுகளை கொட்டுவதற்கு கடும் கட்டுப்பாடுகள் மற்றும் தண்டனைகள் உள்ளதால், இவ்வகை கழிவுகள் தமிழக எல்லை பகுதிகளில் கொட்டப்படுகின்றன. இதுபோன்ற செயல்களை உடனடியாக தடை செய்து, கழிவுகளை கொட்டும் வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.