போதை கலாச்சாரத்திற்கு எதிராக ஜமாத்தே இஸ்லாமிய ஹிந்த் அமைப்பின் மகளிரணி சார்பில், “ஒழுக்கமே சுதந்திரம்” என்ற கருத்தை வலியுறுத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 1 முதல் 30 வரை நாடுதழுவிய அளவில் பல்வேறு விழிப்புணர்வு பேரணி, மனித சங்கிலி, கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும் என்று மகளிரணி மாநில ஒருங்கிணைப்பாளர் மும்தாஜ் தெரிவித்தார்.
திருச்சி பிரஸ் கிளப்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, மும்தாஜ் பேசுகையில், இந்தியாவில் போதை பொருட்களின் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், ஒழுக்கம் இல்லாத தன்மையால் விபத்துக்கள் மற்றும் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருவதாக குற்றம்சாட்டினார். மேலும், மதுவை தடை செய்யாமல், டாஸ்மாக் கடைகளை நடத்தி வருவதை அரசு நிறுத்த வேண்டும் என்றும், பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
இதேபோல, இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதால் அக்கறை வெளியிட்டார். தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் தரவுகளின் படி, இந்தியாவில் தினசரி 90 பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் நடைபெறுவதாகவும், ஆண்டுக்கு 32 ஆயிரம் சம்பவங்கள் பதிவாகின்றனவையும் அவர் குறிப்பிட்டார். தன்பால் உறவுகள் மற்றும் முறையற்ற உறவுகள் எதிர்கால தலைமுறையை நாசப்படுத்தும் என்று எச்சரித்தார்.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், அனைத்து சமுதாய மக்களுக்கும் சாதி மத பேதங்களின்றி கொண்டு செல்லப்பட்டு, ஒழுக்கமான சமுதாயத்தை உருவாக்கும் நோக்கத்துடன் நடைபெறும் என அவர் தெரிவித்தார்.
இந்த செய்தியாளர் சந்திப்பில் மகளிரணி நிர்வாகிகள் பைரோஸ், பரக்கத் நிஷா, ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் மாநில செயலாளர் சிக்கந்தர் மற்றும் மக்கள் தொடர்பு செயலாளர் நவாஸ்கான் ஆகியோர் பங்கேற்றனர்.