சம்பிரதாய முறைப்படி ஏழுமலையான் கோவில் புது வரவு செலவு கணக்கு துவக்கப்பட்டது.
ஸ்ரீரங்கம் கோவில் மங்கள பொருட்கள் பட்டு வஸ்திரங்கள் ஆகியவை அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு முன்னிலையில் ஏழுமலையானுக்கு சமர்ப்பிக்கப்பட்டன.
ஆணி வாரா ஆஸ்தான தினமான இன்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சம்பிரதாய முறைப்படி புது வரவு செலவு கணக்கு துவக்கப்பட்டது.
ஆணிவார ஆஸ்தானம் நாள் அன்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் புது கணக்கு துவங்குவது வழக்கம்.
இதனை முன்னிட்டு ஸ்ரீரங்கத்தில் இருந்து மங்களப் பொருட்கள் கொண்டு வரப்பட்டு ரங்கநாதர் சார்பில் ஏழுமலையானுக்கு சமர்ப்பிக்கப்படுவதும் வழக்கம்.
ஆணிவார ஆஸ்தானத்தை முன்னிட்டு இன்று கோவிலில் ஏழுமலையானுக்கு சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டன.
பின்னர் தேவஸ்தான அதிகாரிகள் கடந்த ஒரு ஆண்டு வரவு செலவு கணக்கை ஏழுமலையான் முன் படித்து சமர்ப்பித்தனர்.
இதனை தொடர்ந்து கோவில் ஏகாங்கி ஜீயர்கள், தேவஸ்தான நிர்வாக அதிகாரி மற்றும் அதிகாரிகள்,அன்னமய்யா பரம்பரையினர், வெங்கமாம்பா பரம்பரையினர், பக்தர்கள் ஆகியோரிடம் இருந்து காணிக்கை வசூல் செய்து ஜீய்ரிடம் ஒப்படைத்தார்.
அந்த தொகையை தேவஸ்தான நிர்வாக அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டது. அது புதிய வரவு செலவு கணக்கு புத்தகத்தில் முதல் வரவாக வரவு வைக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து பக்தர்களுக்கு சாமி தரிசன அனுமதி அளிக்கப்பட்டது.
தொடர்ந்து உற்சவர்களுக்கு ஏழுமலையான் கோவிலில் சிறப்பு அபிஷேகம் மேற்கொள்ளப்பட்டது.
ஆணிவார ஆஸ்தானத்தை முன்னிட்டு இன்று மாலை திருப்பதி மாலையில் ஏழுமலையானின் புஷ்ப பல்லக்கு உற்சவம் நடைபெற உள்ளது
முன்னதாக ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் இருந்து கொண்டுவரப்பட்ட பட்டு வஸ்திரங்கள், மங்கள பொருட்கள் ஆகியவற்றிற்கு சிறப்பு பூஜைகள் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, தமிழக இந்து அறநிலை துறை ஆணையர் குமரகுருபரன், இணை ஆணையர் மாரியப்பன் ஆகியோர் முன்னிலையில் திருப்பதி மலையில் உள்ள பெரிய ஜீயர் மடத்தில் மேற்கொள்ளப்பட்டன.
இதனை தொடர்ந்து கோவில் மரியாதையுடன் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்ட பட்டு வஸ்திரங்கள், மங்களப் பொருட்கள் ஆகியவை அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில் ஏழுமலையானுக்கு சமர்ப்பிக்கப்பட்டன.