சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் குடியரசுத் தலைவர் பதக்கங்கள், உள்துறை அமைச்சர் பதக்கங்கள், மற்றும் முதலமைச்சர் பதக்கங்கள் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில் சிறப்பாக செயலாற்றிய காவலர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதக்கங்களை வழங்கி கவுரவித்தார்.
உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “காவல்துறை என்னுடைய துறை என்பதால் இந்த நிகழ்ச்சி எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. நானே பதக்கம் வாங்கியது போல் மகிழ்ச்சியடைகிறேன். பதக்கம் வென்ற காவலர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். பதக்கங்களுக்கு பின்னால் உள்ள உழைப்புக்கு தலை வணங்குகிறேன். அமைதி தழுவிய மாநிலத்தில் வளமும் வளர்ச்சியும் சிறக்கின்றன,” என்றார்.
முதல் முதலாவதாக காவல்துறையில் பெண்களுக்கு வாய்ப்பு அளித்தவர், மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி என்று நினைவு கூர்ந்த முதல்வர், “மகப்பேறு விடுப்பு முடித்து பணிக்கு திரும்பும் பெண் காவலர்களுக்கு அவர்களின் விருப்பம் படி பணியிடங்களை வழங்க அரசு உறுதி அளிக்கின்றது” எனவும் குறிப்பிட்டார்.
முதல்வர் உரையில் காவல்துறையை மேலும் நவீனப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், காவல்துறையினரின் நலனை பாதுகாக்க அரசு பல்வேறு முயற்சிகள் செய்து வருவதாகவும் அறிவித்தார். “மக்களை பாதுகாக்கும் காவலர்களை பாதுகாப்பது அரசின் கடமை” என்று அவர் கூறினார்.
Leave a Reply