தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே முடச்சிக்காடு பகுதியில் ஆந்திர மாநிலத்தில் இருந்து லாரியில் ரகசியமாக 300 கிலோ கஞ்சாவை கடத்தி வந்தவர்களை தஞ்சாவூர் சிறப்பு தனிப்படை போலீசார் வெள்ளிக்கிழமை அதிகாலை கைது செய்தனர்.
முடச்சிக்காடு கலைஞர் நகரில் கஞ்சா கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் போலீசார் அங்கு சென்று, லாரியில் கடத்தி வந்த கஞ்சாவை காருக்கு மாற்றிக் கொண்டிருந்ததை கண்டுபிடித்தனர்.
விசாரணையில், லாரியின் பெட்ரோல் டேங்க் பகுதியில் ரகசிய அறை அமைத்து அதில் கஞ்சா மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது.
போலீசார் 100 கிலோ கஞ்சா லாரி மற்றும் கார் ஆகிய பொருட்கள் கைப்பற்றினர்.
இந்த சம்பவத்தில் பேராவூரணி அருகே காரங்குடா பகுதியை சேர்ந்த அண்ணாதுரை (44), அம்மணி சத்திரம் பகுதியை சேர்ந்த முத்தையா (60), தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியை சேர்ந்த தர்மராஜ் (34) ஆகிய மூவரை கைது செய்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்த தஞ்சாவூர் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத், கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.