
புதுச்சேரி விளையாட்டு வளர்ச்சி ஆணையம் (SDAP) என்பது சட்டவிரோதமாக உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பாகும். இது புதுச்சேரி மாநில விளையாட்டு வீரர்களுக்கும் விளையாட்டு சங்கங்களுக்கும் எந்த ஒரு நன்மையும் வழங்காதது வெட்கக்கேடான விஷயம்.
இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில், முதலமைச்சர் ரங்கசாமியின் தலைமையிலும் விளையாட்டு துறை அமைச்சர் நமச்சிவாயத்தின் முன்னிலையிலும் SDAP பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இதற்கான தேதி, நேரம், இடம் ஆகியவை ஆறு முறை அறிவிக்கப்பட்டும், எவ்வித காரணமுமில்லாமல் கூட்டம் இன்று வரை நடத்தப்படவில்லை. இது புதுச்சேரி அரசின் அலட்சியத்தை வெளிப்படுத்தும் ஒரு மிகப்பெரிய உதாரணம்.
மாநில, தேசிய, சர்வதேச போட்டிகளில் வெற்றி பெற்ற தகுதி வாய்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு கடந்த 16 ஆண்டுகளாக எந்த உதவித் தொகையும், ஊக்கத் தொகையும் வழங்கப்படவில்லை. இது வெறுக்கத்தக்க செயலாகும். மேலும், விளையாட்டு வீரர்கள் போட்டிகளின்போது எதிர்நோக்கும் அசம்பாவிதங்களுக்கு பண உதவியும், மருத்துவ உதவியும் அரசு வழங்க மறுப்பது மிகவும் கண்டனத்திற்குரியது.
மேலும், விளையாட்டு வீரர்களுக்கான கல்வி இட ஒதுக்கீட்டில் முறைகேடுகள் ஆட்சி செய்து வருகின்றன. குறிப்பாக, சென்டாக் மேற்படிப்பில் சில உடற்கல்வி ஆசிரியர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு என்ற பெயரில் மாபெரும் முறைகேடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
எனவே, இவ்வாறு முறைகேட்டில் ஈடுபடும் உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் அலுவலக அதிகாரிகளை உடனடியாக மாற்றி, நேர்மையான அதிகாரிகளை நியமிக்க வேண்டும். விளையாட்டு வீரர்களின் தகுதி சான்றிதழ் சரிபார்ப்பை வெளிப்படையாகவும் நியாயமாகவும் நடத்த வேண்டும் என புதுவை அரசு தயவுசெய்து பரிசீலிக்க வேண்டுகிறேன்.எனறு கராத்தே வளவன் தலைவர், புதுவை மாநில விளையாட்டு வீரர்கள் நலச்சங்கம் தெரிவித்துள்ளது.