புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக மேகமூட்டத்துடன் காணப்பட்ட வானிலை, தற்போது மழையாக மாறியுள்ளது. வியாழக்கிழமை இரவு தொடங்கி, வெள்ளிக்கிழமையும் (ஆகஸ்ட் 10) தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால், புதுச்சேரியில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து பள்ளிக்கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
மழையின் தாக்கம் காரணமாக, புதுச்சேரி நகரின் பல பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டுள்ளது. ஏஎப்டி மைதான தற்காலிக பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் குளங்கள் போல தண்ணீர் தேங்கியுள்ளது. புஸ்சி வீதி, அண்ணா சாலை, நேரு வீதி, காந்தி வீதி, சாரம், லாஸ்பேட்டை, வெங்கடேஸ்வரா நகர், பாலாஜி நகர், பூமியான் பேட்டை, ஜவகர் நகர் ஆகிய நகரப் பகுதிகள் அனைத்தும் மழை நீரில் சூழப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடுமையான சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.
மேலும், வானிலை ஆய்வு மையம் புதுச்சேரியில் மிக கன மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் விளைவாக, புதுச்சேரி நகரம் முழுவதும் மழை நீரில் மூழ்கியுள்ளது.