புதுச்சேரி ரெட்டியார்பாளையம் பகுதியில் உள்ள ராஜா முகமது சொந்தமான ஏசி சர்வீஸ் சென்டர் கடையில் நேற்று இரவு பூட்டை உடைத்து ரூ.20 ஆயிரம் பணம் திருடப்பட்டது. சம்பவம் குறித்து கடை உரிமையாளர் புகார் அளித்ததையடுத்து, ரெட்டியார் பாளையம் காவல் நிலையத்தின் சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன் தலைமையில் வடக்கு குற்றப்பிரிவு போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில், அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்த பிரபல திருடன் ரவிக்குமார் (68), என்கிற “ஓகை குமார்” திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதாக தெரியவந்தது. இவர் கைது செய்யப்பட்டு, இவரிடம் இருந்து ரூ.20 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், இவரது மீதான 50க்கும் மேற்பட்ட வழக்குகள் புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. தற்போது, இவர் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.