
மத்திய அரசின் 2025 ஆம் ஆண்டு பட்ஜெட் விளக்க பொதுக் கூட்டம் கோவை தெற்கு மாவட்ட பா.ஜ.க சார்பில் சுந்தரபுரத்தில் நடைபெற்றது. இதில் பா.ஜ.க தேசிய செயற்குழு உறுப்பினர் H. ராஜா கலந்து கொண்டார். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அவர், பட்ஜெட் தொடர்பாக கருத்து தெரிவித்தார்.
“வீர தமிழச்சி நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் சிக்ஸர் அடித்திருக்கிறார்,” என்று அவர் பாராட்டினார். 2014-ல் வருமான வரி உச்ச வரம்பு ₹2.5 லட்சமாக இருந்தது. 2019-ல் ₹5 லட்சமாக உயர்த்தப்பட்டது. தற்போது 2024-ல் ₹12 லட்சம் வரை வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனால், மாதம் ₹12 லட்சம் வருமானம் பெறுவோர் ₹80,000 வரை சேமிக்க முடியும். விவசாயிகளுக்கான பயிர்க்கடன் ரூ.3 லட்சம் கோடியில் இருந்து ₹5 லட்சம் கோடி ஆக உயர்த்தப்பட்டுள்ளது. சிறு, குறு தொழில்களுக்கு கூடுதல் இடம் அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால், தமிழக முதல்வர், மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாமல், “மொழி பிரச்சினையை தூக்கிப் பேசி அரசியல் செய்ய முயல்கிறார்,” எனக் குற்றம் சாட்டினார். “தமிழக முதல்வருக்கு இதுபோன்று பேசுவதற்கு வெட்கம் இல்லையா?” என்ற கேள்வியையும் எழுப்பினார்.
“ஹிந்தி உங்களுக்கு பிரச்சனையாக இருந்தால், உங்கள் சன் சைன் பள்ளியில் ஹிந்தி சொல்லித் தரக்கூடாது. உங்கள் தந்தை கருணாநிதி தான் சமச்சீர் கல்வியை கொண்டு வந்தார், அல்லவா?” என்று அவர் கண்டனம் தெரிவித்தார்.
“முதலில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழியை வீட்டுக்கு அனுப்புங்கள். 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களை கூட மாற்ற முடியாத சக்தி இல்லையென்றால், எதற்காக அமைச்சராக இருக்க வேண்டும்?” என்றார்.நீங்கள் நடத்தும் தனியார் பள்ளிகளில் ஹிந்தி இருக்கலாம், ஆனால் அரசு பள்ளிகளில் இருக்கக் கூடாது எனக்கூறுவது ஏன்? என்ற கேள்வியையும் எழுப்பினார்.
ஆனைமலை-நல்லார் திட்டம் நெடுநாளாக நிலுவையில் உள்ளது. ஆனால், கேரள மாநிலத்துக்கு சென்று முதலமைச்சர் ஏன் இதைப் பற்றி பேசவில்லை?கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கு பகுதியில் 20 ஆயிரம் வீடுகள் உள்ளன. அந்த பகுதி மக்கள் வெளியே வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. நுரையீரல் தொற்று, மார்பகப் புற்றுநோய் போன்ற பல நோய்கள் அங்கு அதிகரித்துள்ளன. இது திராவிட அரசு காலத்தில்தான் நடந்து வருகிறது.
“திராவிட மிருகங்கள் ஆட்சி நடத்தி வருகின்றன. கோவை மாநகராட்சி அயோக்கியர்கள் கூட்டமாக உள்ளது,” என்றார்.
ஏப்ரல் மாதம் முதல் கோவை மாநகராட்சிக்கு மக்கள் யாரும் வரி செலுத்தப் போவதில்லை என்றும் அவர் எச்சரித்தார்.தமிழ்நாட்டில் பேன்சி மூட நம்பிக்கை என்னவென்றால், “மத்திய அரசுக்கு எதிராக பேச வேண்டும் என்பதே” என விமர்சித்தார்.
“த.வெ.க விஜய் பிள்ளைகள் சமச்சீர் பள்ளியில் படிக்கிறார்களா?”
மாநகராட்சி பள்ளியில் படிக்கும் குழந்தைகள் வேறு மொழி கற்கக்கூடாது எனக் கூறுவோர், நாளை காலை அவர்களது குழந்தைகளை மாநகராட்சி பள்ளிகளில் சேர்க்க வேண்டும். எந்த மாநிலத்திலும் மும்மொழிக் கொள்கைக்கு தடையில்லை.”விஜய் குழந்தை, ஸ்டாலின், கனிமொழி ஆகியோரின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்கின்றனர். அவர்களை இங்கே கொண்டு வந்து மாநகராட்சி பள்ளியில் சேர்க்கச் சொல்வீர்!” என்று H. ராஜா கண்டனம் தெரிவித்தார்.
