சென்னை: 2006 முதல் 2011 வரை தி.மு.க. ஆட்சியில் கனிம வளம் மற்றும் சுரங்கத்துறை அமைச்சராக இருந்த அமைச்சர் க.பொன்முடி, விழுப்புரம் மாவட்டம் பூத்துறையில் செம்மண் எடுப்பதற்கான அனுமதி வழங்கலில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
2012 ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியின் போது, இதுகுறித்து பொன்முடி உள்ளிட்ட 8 பேருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது. விழுப்புரம் குற்றப்பிரிவு போலீசார், செம்மண் முறைகேடு வழக்கில் ரூ.28.36 கோடி இழப்பீடு ஏற்பட்டதாக குற்றம்சாட்டினர்.
இந்த விவகாரத்தில், அமலாக்கத் துறை அதிகாரிகள், பொன்முடி உட்பட அவருடைய உறவினர்களின் சொத்துகளில் ஏற்கனவே சோதனை நடத்தியிருந்தனர். மேலும், அவர் மீது விசாரணையும் மேற்கொண்டனர்.
இந்தநிலையில், அமைச்சர் பொன்முடி இன்று நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகினார். செம்மண் முறைகேடு தொடர்பாக அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தி, தகவல்களை சேகரித்துள்ளனர்.
இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.