ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் இடைத்தேர்தல் அடுத்த மாதம் பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் பணிகள் கடந்த வாரம் துவங்கியுள்ளன.
இதுவரை தேர்தல் மன்னன் பத்மராஜன் உட்பட மூன்று பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். விசேஷமாக, இவர்கள் மூவரும் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் அல்ல. ஈரோடு கிழக்கு தொகுதியில் இருந்து எந்த ஒரு உள்ளூர் வேட்பாளரும் இதுவரை மனுதாக்கல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு கட்சியின் சின்னம் ஒதுக்கப்படும். சுயேச்சை வேட்பாளர்களுக்காக தேர்தல் ஆணையம் 135 தனித்துவமான சின்னங்களை ஒதுக்கி வைத்துள்ளது. அவர்கள் அந்த பட்டியலில் இருந்து விருப்பமான மூன்று சின்னங்களை தேர்வு செய்து மனுவில் குறிப்பிட வேண்டும்.
ஒரே சின்னத்தை ஒரே நேரத்தில் பலர் தேர்வு செய்தால், குலுக்கல் முறையில் அந்த சின்னம் ஒதுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.