திருப்பூர் மாவட்டம் பொங்கலூர்-சேமலைக் கவுண்டம்பாளையத்தில் விவசாய தம்பதி மற்றும் அவர்களின் மகன் ஆகிய மூவரும் படுகொலை செய்யப்பட்டதாக வெளியான செய்தி தமிழகத்தை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார். தி.மு.க. ஆட்சியின் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து கேள்வி எழுப்பிய அவர், “திருப்பூர் பகுதியில் மூவர் படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. தி.மு.க. ஆட்சியில் குற்றவாளிகளுக்கு துளியும் பயமில்லை. இந்த தொடர்ச்சியான குற்றங்கள் தமிழ்நாட்டில் ‘ஆட்சி இருக்கிறதா இல்லையா?’ என்ற கேள்வியை மக்கள் மத்தியில் எழுப்புகின்றன,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
“தமிழ்நாட்டை குற்றவாளிகளின் சொர்க்கபூமியாக மாற்றியிருக்கும் தி.மு.க. அரசுக்கு கடும் கண்டனம்,” என்று எடப்பாடி பழனிசாமி தனது கருத்தில் தெரிவித்தார்.
இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் உடனடியாக கைது செய்து, சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இனிமேல் சட்டம் ஒழுங்கை உறுதிப்படுத்த தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.