சென்னை: தந்தை பெரியாரின் 51-ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். நிகழ்வில், முதலமைச்சர் ஸ்டாலின் எணினி நூலகம் மற்றும் ஆய்வு மையத்தை திறந்து வைத்தார்.
பெரியார் திடலில் அமைக்கப்பட்ட எணினி நூலகம், இளைய தலைமுறைக்கு பெரியாரின் வாழ்க்கை வரலாறையும், அவரின் சாதனைகளையும், சிந்தனைகளையும் அறிய உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, பெரியாரின் அடையாளமான கைத்தடியை நினைவுப் பரிசாக முதலமைச்சருக்கு வழங்கினார். இதன் பின்னர், நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்,
“நான் எத்தனையோ நினைவுப் பரிசுகளைப் பெற்றிருந்தாலும், இந்த பரிசுக்கு எதுவும் ஈடாகாது. திராவிட மாடல் என்றால் என்ன என்று கேலி செய்பவர்களுக்கு இந்த கைத்தடியே பதிலாக இருக்கும். ஆண்டாண்டு காலமாக ஒடுக்கப்பட்ட தமிழினத்தை ஒற்றுமைப்படுத்தி, அவர்களின் சுயமரியாதையை உயர்த்தி நிறுத்தியவர் பெரியார். அவரது நினைவு நாளில் இளைய தலைமுறைக்கு அவரின் சிந்தனைகளை கொண்டு செல்லும் நோக்கில் இந்த நூலகம் அமைக்கப்பட்டுள்ளது,” என கூறினார்.
அதன் பிறகு, பெரியாரின் சமூக சீர்திருத்தப் போராட்டங்கள், தடை செய்யப்பட்ட காலகட்டங்களில் அவர் எதிர்கொண்ட சவால்கள் மற்றும் இன்று அவரது சிந்தனைகள் தமிழ்நாட்டை வழி நடத்துவதில் உள்ள முக்கியத்துவம் குறித்து குறிப்பிட்டார்.