
கோவை நஞ்சுண்டாபுரத்தில் உள்ள எஸ்.எல்.வி. மருத்துவமனையில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதம் அனுசரிப்பு நிகழ்ச்சி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு புற்றுநோய் அறுவை சிகிச்சை சங்கத் தலைவர் மற்றும் எஸ்.எல்.வி. மருத்துவமனை புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஏ. சுரேஷ் வெங்கடாசலம் நிகழ்ச்சியில் பேசினார்.
1989 முதல் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக கடைபிடித்து வருவதாகவும், இந்தாண்டு அக்டோபர் மாதம் முழுவதும் பொதுமக்களுக்கு இலவச ஆலோசனை மற்றும் சலுகை கட்டணத்தில் பரிசோதனைகள் செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், மார்பக புற்றுநோயை ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் முழுமையாக குணப்படுத்தலாம். 50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் ஒவ்வொரு மாதமும் மார்பக சுய பரிசோதனை செய்ய வேண்டும், மேலும் ஆண்டுதோறும் மேமோகிராம் (மார்பக ஸ்கேன்) பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். 1 செ.மீ. அல்லது அதற்கும் குறைவாக உள்ள கட்டியை கண்டறிந்தால் அதை முற்றிலும் குணப்படுத்த இயலும்.
எஸ்.எல்.வி. மருத்துவமனையில் நவீன தொழில்நுட்பங்களுடன் மார்பக புற்றுநோய் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, மேலும் மார்பகத்தை அகற்றாமல் சிகிச்சை செய்யும் முறைகள் கிடைக்கின்றன.
2004 முதல் மார்பக புற்றுநோய் சிகிச்சைக்காக கிமோபோர்ட் உள்வைப்பு அறுவை சிகிச்சையும் இங்கு மேற்கொள்ளப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில் மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.