மிர்சாபூர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை நடந்த கோர விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர் மற்றும் 3 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து மிர்சாபூர்-வாரணாசி எல்லையில், கச்சவான் மற்றும் மிர்சாமுராத் இடையே ஜிடி சாலையில் ஏற்பட்டது.
விபத்து குறித்து மிர்சாபூர் காவல் கண்காணிப்பாளர் அபிநந்தன் விளக்கமளித்தார். “படோஹி மாவட்டத்தில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த 13 தொழிலாளர்கள், பணியை முடித்து டிராக்டர் டிராலியில் தங்கள் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அதிகாலை 1 மணியளவில் டிராக்டர் டிராலி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த லாரி மீது மோதியது,” என அவர் கூறினார்.
விபத்து நிகழ்ந்த இடத்தில் 10 தொழிலாளர்கள் உயிரிழந்தனர், மேலும் மூன்று பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதிர்ச்சி சம்பவம் குறித்து அறிந்து விரைந்து வந்த போலீஸ் மற்றும் மேலதிக அதிகாரிகள் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இறந்தவர்களின் உடல்கள் உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. காயமடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக கச்சவான் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து, விபத்து குறித்து மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.