சபரிமலை ஐயப்பன் கோவிலின் மிகவும் புனிதமான பதினெட்டாம் படி தொடர்பான விதிகளை மீறியதாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவிலில் மாலையணிந்து இருமுடி கட்டி வரும் பக்தர்கள் மட்டுமே பதினெட்டாம் படி ஏற அனுமதிக்கப்படுவார்கள். மேலும், அந்த படியில் ஏறி செல்ல மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது; இறங்கி வர அனுமதி கிடையாது. ஆனால், பந்தள மன்னரின் பிரதிநிதிகள், தந்திரி மற்றும் மேல்சாந்தி ஆகியோருக்கு மட்டுமே அந்த விதியிலிருந்து விலக்கு உண்டு. அவர்கள் பின்நோக்கி இறங்குவதை மரபாக பின்பற்றுவார்கள்.
இந்த நிலையில், பக்தர்களுக்கு உதவ காவல்துறை அதிகாரிகள் பதினெட்டாம் படியில் பணியாற்ற அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனால், அண்மையில் அந்த காவல்துறை அதிகாரிகள் கோவிலின் மதிய நேரத் தக்கை மூடப்பட்டிருந்த போது, அந்தப் புனித படியில் நின்று குரூப்-போட்டோ எடுத்தது சமூக வலைதளங்களில் பரவியது.
இதனால் பக்தர்களிடையே கடும் அதிருப்தி ஏற்பட்டது. இந்து அமைப்புகள் இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்ததுடன், காவல்துறையினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தின.
சமூக வலைதளங்களில் உருவான சர்ச்சையைத் தொடர்ந்து, கேரள ஏ.டி.ஜி.பி. ஸ்ரீஜித், சன்னிதான போலீஸ் சூப்பிரண்டு பைஜூவுக்கு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டார்.
விசாரணை மற்றும் நடவடிக்கைகள்:
கடந்த 14-ந்தேதி பணிக்கு வந்த போலீசார், 25-ந்தேதியுடன் பணி முடித்து புறப்படும் போது, கோவில் நடை மூடிய நேரத்தில் பதினெட்டாம் படியில் நின்று குரூப்-போட்டோ எடுத்தது தெரியவந்தது.
பணியில் இருந்த காவல்துறை அதிகாரியிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.
30 போலீசாரின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம், சபரிமலையின் புனிதத் தன்மையை மீறியதாகக் கூறி, பக்தர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது.