Friday, January 24

கொல்கத்தாவில் பெண் மருத்துவர் கொலை….மனு தாக்கல்

கொல்கத்தாவில் முதுநிலை மருத்துவ மாணவியின் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தின் கொல்கத்தா அரசு மருத்துவமனையில் பணியாற்றிய ஒரு முதுநிலை மருத்துவ மாணவி, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வியாழக்கிழமை (ஆக. 8) இரவுப் பணிக்குச் சென்ற பெண் பயிற்சி மருத்துவர், வெள்ளிக்கிழமை காலை கருத்தரங்கு அறையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

முதற்கட்ட உடற்கூறாய்வில், இந்த மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த கொடூர சம்பவத்துக்கு எதிராக மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு, வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். மாணவர்களின் போராட்டத்தைத் தொடர்ந்து, மருத்துவக் கல்லூரி தலைவர் சந்தீப் கோஷ் தனது பதவியிலிருந்து ராஜிநாமா செய்துள்ளார்.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி, மேற்கு வங்க பாஜக தலைவர் மற்றும் கொல்கத்தா உயர்நீதிமன்ற வழக்கறிஞர் கவுஸ்தாவ் பாக்சி, உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். மேலும், அனைத்து மருத்துவக் கல்லூரி மற்றும் ஓய்வு அறைகளில் சிசிடிவி கேமரா பொருத்த நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கோரியுள்ளார்.

இதையும் படிக்க  தீ விபத்தில்  உயிரிழந்த 45 இந்தியரின் உடல்கள் கேரளாவை வந்தடைந்தது.....

இதற்கு முன்னர், பெண் மருத்துவர் கொலை வழக்கில் எந்தவித தலையீடுகளும் இல்லாமல் முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்றும், மருத்துவர்களின் பாதுகாப்பை மேம்படுத்த தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்திய மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *