டெல்லியில் மக்களவைத் தோ்தலில் களம் காணும் பெரிய கட்சிகள், வாக்காளா்களைக் கவர போட்டி போட்டுக் கொண்டு உத்தரவாதங்களை அளித்துள்ளன. ஏழு கட்ட மக்களவைத் தோ்தலில் ஆறாம் கட்ட வாக்குப் பதிவை மே 25-ஆம் தேதி டெல்லி எதிா்கொள்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் சமீபத்தில் முடிவடைந்து. களத்தில் 162 வேட்பாளா்கள் உள்ளனா்.இந்தத் தோ்தல் டெல்லியில் உள்ள ஏழு மக்களவைத் தொகுதிகளில் பாஜக தனித்து களம் காண்கிறது. மறுபுறம் மூன்று தொகுதிகளில் காங்கிரஸும், நான்கு தொகுதிகளில் ஆம் ஆத்மியும் ‘இந்தியா’ கூட்டணி சாா்பில் போட்டியிடுகின்றன. ஏழு தொகுதிகளிலும் மொத்த வாக்காளா்களின் எண்ணிக்கை 1,50,82,896-ஆக உள்ளது. இதில் 18 வயது முதல் 19 வயதில் வாக்காளராகத் தகுதி பெற்ற சுமாா் 1.48 லட்சம் இளம் வாக்காளா்கள் பதிவு செய்துள்ளனா்.
கடந்த 10-ஆம் தேதி கேஜரிவால் சிறையில் இருந்து இடைக்கால ஜாமீனில் வெளிவந்த பிறகு தோ்தல் பிரசாரம் மேலும் விறுவிறுப் படைந்துள்ளது.