
திருப்பதியில் சாமி தரிசனத்திற்காக அலிபிரி மற்றும் ஸ்ரீவாரி மெட்டு நடைபாதைகளில் வழியாக மலைக்கு நடந்து செல்லும் பக்தர்களின் சிரமத்தை குறைக்கும் வகையில் புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருப்பதி பஸ் நிலையம் மற்றும் ரெயில் நிலையத்திலிருந்து நடைபாதை இடங்களுக்கு ஆட்டோ, கார், வேன் போன்றவற்றில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதைத் தொடர்ந்து, பக்தர்களின் வசதிக்காக 20 மின்சார பஸ்கள் வாங்கப்பட உள்ளன.
இந்த மின்சார பஸ்கள் நன்கொடையாளர்களின் உதவியுடன் பெறப்பட்டுள்ளன. புதிய திட்டத்தின் கீழ், பஸ் மற்றும் ரெயில் நிலையங்களிலிருந்து அலிபிரி மற்றும் ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை பகுதிகளுக்கு இலவச பஸ்கள் இயக்கப்படும் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இந்த செய்தி நடைபாதை வழியாக சாமி தரிசனம் செல்லும் பக்தர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், நேற்று (05 மே) திருப்பதியில் 83,380 பேர் சாமி தரிசனம் செய்தனர். அதில் 27,936 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தியுள்ளனர். உண்டியலில் ரூ.3.35 கோடி காணிக்கை வசூலாகியுள்ளது. நேற்று வார இறுதி விடுமுறை தினம் என்பதால் அதிக அளவில் கூட்டம் காணப்பட்டது. இன்று காலை பக்தர்கள் கூட்டம் குறைவாக காணப்பட்ட நிலையில், நேரடியாக தரிசன அனுமதி வழங்கப்பட்டதால், பக்தர்கள் சுமார் 4 மணி நேரத்திலேயே தரிசனம் செய்து வருகின்றனர்.