
வக்ஃப் திருத்தச் சட்டம் 2025 குறித்து காங்கிரஸ் வதந்திகளை பரப்பி வருகிறது என மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்திரா யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.
தில்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு சமூக நீதி, பொருளாதார வளர்ச்சி, வெளிப்படைத்தன்மை மற்றும் பாலின சமத்துவம் உள்ளிட்ட பல துறைகளில் முக்கியமான சீர்திருத்தங்களை கொண்டு வந்துள்ளது” என்று கூறினார்.
அதன் தொடர்ச்சியாக, சமீபத்தில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வக்ஃப் திருத்தச் சட்டம் 2025, நாட்டின் முற்போக்கான பயணத்தில் ஒரு முக்கியமான அடையாளமாகும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்தச் சட்டம் இஸ்லாமியர்களின் உரிமைகளை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் உள்ளது என காங்கிரஸ் பரப்பும் வதந்திகளுக்கு எந்த அடிப்படையும் இல்லையென்றும், இதுவே இந்தச் சட்டத்தில் மேற்கொள்ளப்படும் முதல் திருத்தம் அல்ல என்றும் அவர் தெரிவித்தார்.
வக்ஃப் சொத்துகளின் மேலாண்மை சீரமைப்பு நோக்கத்துடன்:
“2013ஆம் ஆண்டு கடைசி திருத்தத்தின் போது வக்ஃப் விவகாரங்களில் வெளிப்படைத்தன்மை மற்றும் நிர்வாக சிக்கல்கள் பரிசீலிக்கப்படவில்லை. தற்போது 2025 திருத்தத்தில் இவை கவனிக்கப்பட்டுள்ளன,” எனவும் அவர் கூறினார்.
முஸ்லிம் சமூகத்தினர் தானமாக வழங்கும் நிலங்கள் மற்றும் சொத்துகளை வக்ஃப் வாரியம் நிர்வகித்து வருகிறது. இதன் நிர்வாகத்தை சீரமைக்கும் நோக்கத்தில்தான், 1995-ஆம் ஆண்டின் வக்ஃப் சட்டத்தில் மத்திய அரசு தற்போது திருத்தங்களை மேற்கொண்டுள்ளது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.