மலேரியா இல்லாத நாடாக எகிப்தை அங்கீகரித்து, சான்று அளித்துள்ளது உலக சுகாதார மையம் (WHO). இது மலேரியா நோயை அழிக்க சுமார் நூற்றாண்டு காலமாக எகிப்து மேற்கொண்ட முயற்சியின் பெரும் வெற்றியாகக் கருதப்படுகிறது.
எகிப்தின் பழமையான நாகரிகம் போலவே, மலேரியாவுக்கும் அந்நாட்டில் நீண்ட வரலாறு உண்டு. எனினும், இனி மலேரியா அந்நாட்டின் கடந்தகால வரலாறு மட்டும் ஆகும்; அங்கு மலேரியா எதிர்காலத்தில் இனி இருக்காது. இந்த வெற்றி, எகிப்து அரசின் மற்றும் மக்களின் அர்ப்பணிப்பின் மாபெரும் சான்று என்று WHO தலைவர் டெட்ரோஸ் அதோனம் கெப்ரியேசஸ் தெரிவித்தார்.
உலக அளவில், எகிப்துடன் சேர்ந்து 44 நாடுகள் மலேரியாவிலிருந்து விடுபட்டுள்ளன. அனோபிலிஸ் கொசுக்களால் பரவும் மலேரியாவை, 3 ஆண்டு காலம் தொடர்ச்சியாகத் தடுக்கவல்ல திறன் கொண்ட நாடுகளுக்கு மட்டுமே உலக சுகாதார மையம் இந்த சான்றினை வழங்குகிறது. மேலும், அதன் பின்னர் மலேரியா பரவுவதை தடுப்பதற்கான நிரந்தர முயற்சியும் அவசியம்.
உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 6 லட்சம் பேர் மலேரியாவால் உயிரிழக்கின்றனர், அதில் 95 சதவீதம் ஆப்பிரிக்காவில் உள்ளவர்கள். 2022-ல் மட்டும் 249 மில்லியன் பேர் மலேரியாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த அங்கீகாரம் எகிப்து சுகாதார துறையின் மாபெரும் வெற்றியாகும். “இந்த சான்று பெறுவது ஒரு பயணத்தின் முடிவு, மற்றொரு பயணத்தின் தொடக்கம்,” என எகிப்து சுகாதார அமைச்சர் கலீல் கூறினார். 1920-களில் தொடங்கிய எகிப்தின் மலேரியா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், 2001-ல் மலேரியாவிலிருந்து முழுமையாக விடுபட்டதாகக் கருதப்படுகிறது.