
பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையத்துக்கு வெளியே ஏற்பட்ட திடீர் குண்டு வெடிப்பில் 2 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 8 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நேற்று இரவு 11 மணியளவில் நிகழ்ந்துள்ளது. அதிகாரிகளின் தகவல்படி, விமான நிலையத்திற்கு வெளியே நின்ற டேங்கர் ஒன்று வெடித்துள்ளது.
உயிரிழந்த இருவரும் சீனர்கள் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை பயங்கரவாதத் தாக்குதலாகக் குறிப்பிடிய சீன வெளியுறவுத்துறை, சம்பவத்துக்கான கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் சியா உல் ஹசன், இது வெளிநாட்டினரை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் எனத் தெரிவித்தார். மேலும், பாகிஸ்தானில் உள்ள சீனர்கள் மீதான தாக்குதலாகவே இத்தாக்குதல் அமைந்துள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
சம்பவம் தொடர்பான வீடியோக்களில், கார்கள் எரிந்து கொண்டிருப்பதுடன், சம்பவ இடத்திலிருந்து புகை எழுவதும் காணப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, அந்த பகுதியை முற்றிலும் முடக்கிய கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.